Welcome PradhiKarthik: தேசியச்செய்திகள்
Showing posts with label தேசியச்செய்திகள். Show all posts
Showing posts with label தேசியச்செய்திகள். Show all posts

Friday, May 31, 2013

பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்வு: டீசல் விலையும் உயர்ந்தது

பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்வு: டீசல் விலையும் உயர்ந்தது


புதுடெல்லி, மே 31:


                   
  சர்வசேத விலை நிலவரங்களுக்கு ஏற்ப, பெட்ரோலியப் பொருட்களின் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டுவதற்கு மாதம் 50 காசுகள் வரை உயர்த்திக் கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு பன்னாட்டு சந்தையில் குறைந்து வருவதால் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதில் செலவு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். 

              இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 29, 2013

பின்லேடன் இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்து இறந்தார்

மெய்காப்பாளர் 'பகீர்' தகவல்: 
பின்லேடன் இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்து இறந்தார்


புதுடெல்லி, மே 29:

அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலாவரும் நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் 'சீல்' படையினர் நெருங்குவதற்குள் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து, மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை. எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 'பெல்ட்'டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா கூறினார்.

Tuesday, May 28, 2013

தங்க நகை மீதான வங்கி கடனுக்கு கட்டுப்பாடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தங்க நகை மீதான வங்கி கடனுக்கு கட்டுப்பாடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை:
                                  தங்கத்தின் தேவையை கட்டுப்படுத்தும் முயற்சியாக வங்கிகளுக்கு, இன்று ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

                                      அதில், வாடிக்கையாளருக்கு தங்க நகைகள், தங்க நாணயங்கள் (50 கிராம் வரை) மீது வங்கிகள் கடன் வழங்கும் போது, அந்த தொகை போர்டு வழங்கிய அனுமதி வரையறைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தங்கம் மாற்று வர்த்தக நிதியம் மீதும், தங்கம் பரஸ்பர நிதியம் அலகுகள் மீதும் கடன் வழங்கக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Sunday, May 26, 2013

இந்தியப்பகுதியில் சீனப்படைகள் மீண்டும் ஊடுருவல்

இந்தியப்பகுதியில் சீனப்படைகள் மீண்டும் ஊடுருவல்


இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் சீனப்படைகள் அத்துமீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லடாக் பகுதியில் முகாம் அமைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சை இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உதம்பூர் அருகே உள்ள சிரி ஜாப் பகுதியில் தற்போதைய எல்லைக்கோடு பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் போது சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனப்பிரதமரின் இந்திய வருகைக்கு இரு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 14 கம்பெனிகள் உத்தேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவைப் பொறுத்தளவில் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்ற கருத்தை தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் அந்தப்பகுதியில் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனா சாலை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது

திருப்பதி கோவில் உண்டியலில் 1 மாதத்தில் 140 கிலோ தங்க நகைகள் குவிந்தது


                   திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். தங்கம், வெள்ளி நகைகளை அதிகாரிகளின் முன் அனுமதி மற்றும் ரசீது பெற்று ஊண்டியலில் செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்கம், வெள்ளி நகைகளையும் உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். 

தினந்தோறும் உண்டியல் எண்ணும் போது தங்க நகைகள் தரம் பிரிக்கப்படும். ஒரு மாதத்தில் கிடைக்கும் நகைகள் கணக்கிடப்பட்டு மாதந்தோறும் 25-ந்தேதி அறிவிக்கப்படும். இந்த வகையில் ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 25-ந் தேதி வரை காணிக்கை மூலம் 140 கிலோ தங்க நகைகள் கிடைத்து உள்ளது. 

இதற்கு முன்பு ஒரு மாதத்தில் 190 கிலோ தங்க நகை கிடைத்தது சாதனையாக கருதப்பட்டது. தற்போது 140 கிலோ தங்கம் கிடைத்திருப்பது 2-வது சாதனையாக கருதப்படுகிறது.

Friday, May 24, 2013

சவுதி அரேபியாவில் இருந்து 56,700 இந்தியர்கள் நாடு திரும்ப முடிவு : அமைச்சர் சல்மான் குர்ஷித்

சவுதி அரேபியாவில் இருந்து 56,700 இந்தியர்கள் நாடு திரும்ப முடிவு : அமைச்சர் சல்மான் குர்ஷித்



புதுடெல்லி: சவுதி அரேபியாவில் இருந்து 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் பெயர் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். வேலை வாய்ப்புகளில் 10 சதவீதத்தை சவுதி இளைஞர்களுக்கு ஒதுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும்  என உத்தரவிடப்பட்டது. இந்தியர்கள் வெளியேற அவகாசம் அளிக்க வேண்டும் என இந்திய தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று, ஜூன் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கியிருக்கும் இந்தியர்கள் தங்களது பெயரை அங்குள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான எக்ஸிட் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், டெல்லியில் உருது பத்திரிகை ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார். அடுத்த ஒன்றரை மாதத்தில் இவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குர்ஷித் கூறினார். சவுதியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்காக இந்தியாவில் இருந்து 10 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியர்கள் நாடு திரும்பும் விஷயத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க சவுதி இளவரசரை சந்தித்து பேச இருப்பதாகவும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

Wednesday, May 22, 2013

கருத்துக் கணிப்பு :இன்று தேர்தல் நடந்தால்... அதிமுகவுக்கு 30 தொகுதி! காங். கட்சிக்கு செம தோல்வி

கருத்துக் கணிப்பு :இன்று தேர்தல் நடந்தால்... அதிமுகவுக்கு 30 தொகுதி! காங். கட்சிக்கு செம தோல்வி
 
டெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்க நேரிடும் என்றும் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஹெட்லைன்ஸ் டுடே- சி வோட்டர் இணைந்து தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் திமுகவுக்கு 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய அளவில் வாக்கு சதவீதம் எப்படி?

தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31% வாக்குகளையும் காங்கிரஸ் 24% வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்துள்ளது. இதர கட்சிகளுக்கு மொத்தமாக 45% வாக்குகள் கிடைக்கும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு


பாஜகவுக்கு 137 தொகுதிகள்!

இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பாரதிய ஜனதா கட்சி 137 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருக்குமாம். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 19 தொகுதிகளும் சிவசேனாவுக்கு 14 தொகுதிகளும் சிரோமணி அகாலி தளத்துக்கு 6 தொகுதிகளும் கிடைக்குமாம். மொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 179 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கடந்த தேர்தலை விட 27 தொகுதிகள் கூடுதலாகும்.

தமிழகத்தில் அதிமுக ஆதிக்கம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.. திமுகவுக்கோ 4 தொகுதிகள் தான் கிடைக்குமாம்.. கடந்த முறை 8 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 1 தொகுதிதானாம்.. தேமுதிகவுக்கு 2 தொகுதியும் மதிமுகவுக்கு 1 தொகுதியும் கிடைக்கிறதாம்..

பீகாரில் எப்படி?

40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மட்டும் 19 தொகுதிகளையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 13 தொகுதிகளையும் கைப்பற்றுமாம்..லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் இம்முறை 8 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியும்தான் கிடைக்குமாம்..


பாஜக ஆளும் மாநிலங்களில்..

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பாஜக கைப்பற்றுமாம்.. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 16 ஐயும், குஜராத்தில் 20 தொகுதிகளையும் பாஜக அணி கைப்பற்றலாம் என்பது ஹெட் லைன்ஸ் டுடேயின் கருத்துக் கணிப்பு.

உ.பி, ஆ.பி.மகாராஷ்டிராவில் எப்படி?

உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 29 தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 27 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி 14 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம். காங்கிரஸ் கட்சி கடந்த முறை வென்ற 26 தொகுதிகளில் 16 ஐ இழந்து 10 தொகுதிகளில்தான் வெல்லக் கூடுமாம்.. ஆந்திர பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 தொகுதிகளையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 11 தொகுதிகளையும் கைப்பற்றலாம். தெலுங்கு தேசம் கட்சியோ 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம்.. மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் சிவசேனா 14 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.. காங்கிரஸ் கட்சிக்கு 12 தொகுதிகள் கிடைக்கலாம்..


மேற்குவங்கத்தில் மமதா ஆதிக்கம்

மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரையில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்... இடதுசாரிகள் கடந்த முறை கைப்பற்றியதைப் போல 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம்...

எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகள்

இதில் எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகளாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளவை... அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திமுக, தேமுதிக என மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.


சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியுள்ளது

சூதாட்ட பணம் பல கோடி எங்கே?
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியுள்ள
து



சென்னை: சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையிலுள்ள தரகர்கள் இந்த பணத்தை டெல்லி மற்றும் மும்பைக்கு அனுப்பியதாக தெரிகிறது. யாருக்கு இந்த பணம் கொடுப்பட்டது என்பது குறித்து விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மும்பை போலீசாரும் சென்னையில் சில இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை சூதாட்ட தரகர்கள் வேதாச்சலம், பஜாஜ் உட்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

சூதாட்ட தரகர்களின் தலைவனாக கருதப்படும் அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த்தான் இந்த பணம் பரிமாற்றத்திற்கு உதவி செய்ததாகவும் தகவல் கிடைத்தும், பிரசாந்த் மட்டும் கடந்த மாதத்தில் ரூ.350 கோடியை சென்னையில் பல இடங்களில் வசூல் செய்து மும்பை மற்றும் டெல்லியுள்ள நபர்களுக்கு அனுப்பிருப்பதும் தற்போது வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக பிரசாந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்த சோதனையில் முக்கிய ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சூடுபிடிக்கும் ஸ்ரீசாந்த் விவகாரம்: ஸ்ரீசாந்த்தின் காதலியிடம் பல மணிநேரம் விசாரணை

சூடுபிடிக்கும் ஸ்ரீசாந்த் விவகாரம்: ஸ்ரீசாந்த்தின் காதலியிடம் பல மணிநேரம் விசாரணை



புதுடெல்லி: ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள டெல்லி போலீசார் ஸ்ரீசாந்த்தின் காதலியிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. ஸ்ரீசாந்த் அவரது காதலிக்கு பரிசு அளித்த செல்போன்கள் குறித்து டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. காதலிக்கு பரிசு அளிக்கப்பட்ட செல்போன்கள் தரகர்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. அனைத்து ஐ.பி.எல் ஆட்டங்களிலும் ஸ்ரீசாந்த்துடன் அவரது காதலியும் இருந்ததால் அவரிடம் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்ரீசாந்த்துக்கும் அவரது சூதாட்ட நண்பர் ஜிஜூ இடையே நடந்த செல்போன் உரையாடல் பதிவு தங்களுக்கு கிடைத்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ஓவரில் 14 ரன்களை விட்டு கொடுக்க வேண்டும் என ஸ்ரீசாந்த்திடம் கூறப்படும் தகவல் அதில் பதிவாகியிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இதற்காக ஐ.பி.எல் போட்டிகள் தொடவதற்கு 2 நாட்கள் முன்னரே கொச்சியில் புதிய சமி கார்டுகள் வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் அரசு தரப்பில் நீதிமன்றத்தில தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீசாந்த்தின் ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக பிரபல நடிகர் தாராசிங்கின் மகன் வின்டு தாரா சிங் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் வின்டுவின் மும்பை வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tuesday, May 21, 2013

கால் இல்லாத நிலையிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய வீராங்கனை அருணிமா சாதனை

கால் இல்லாத நிலையிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய வீராங்கனை அருணிமா சாதனை

காத்மண்டு, மே 21:

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா.

அருணிமா சின்கா (வயது 25), உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். வாலிபால் வீராங்கனையான அருணிமா, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டது. இதில் அவர் தனது இடது காலை இழந்தார்.

ஒரு காலுடன் தத்தித் தத்தி நடந்த அவர் மீது அவரது குடும்பத்தார் மிகவும் இரக்கம் காட்டினர். இதனால் கூனிக் குறுகிப்போன அவர், தன் வாழ்நாளில் எதாவது சாதனை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.

எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப்பற்றி படித்து தெரிந்துகொண்ட அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று விரும்பினார். குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அவரது முயற்சிக்கு மூத்த சகோதரரும், பயிற்சியாளரும் ஊக்கம் அளித்தனர். அத்துடன் உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார்.

அதன்பின்னர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அருணிமா, இன்று காலை 10.55 மணிக்கு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Saturday, May 18, 2013

பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்

பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்


புதுடெல்லி, மே 18:
நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலை சந்தித்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

எனவே, குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மாற்றப்படுவார் என்றும், முன்கூட்டியே மக்களவைத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த சாக்கோ, “பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம். திறமையான பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். தலைமை பொறுப்பு பற்றிய கேள்வி எங்களிடம் இல்லை. அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை” என்றார்.

வரும் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால், மீண்டும் மன்மோகன் சிங் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டபோது, ‘தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது’ என்று கூறினார்.

“உணவு பாதுகாப்பு மசோதா மற்றும், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருகிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது பற்றி ஒருமனதாக எடுக்க வேண்டும். அவர்கள் தயார் என்றால், விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றும் சாக்கோ கூறினார்.

பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை

பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் கைது



ஜெய்பூர், மே 18:
ராஜஸ்தான் மாநிலம், காந்தி நகரில் இளம் சிறார்களுக்கான அரசு அனாதை இல்லம் உள்ளது.

இங்கு தங்கி படித்து வரும் 15-17 வயதுக்குட்பட்ட பேச்சு மற்றும் கேட்புத் திறனற்ற மாணவிகளை கனோட்டா பகுதியில் அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 'அவாஸ் பவுண்டேஷன்' பேச்சுத்திறன் பள்ளிக்கு அனாதை இல்ல நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.

பயிற்சி முடிந்து காந்தி நகர் ஆசிரமத்துக்கு திரும்பிய 5 மாணவிகளும் தொடர்ந்து சில நாட்கள் வரை சரியாக சாப்பிடாமல் அழுதபடி இருந்தனர். ஆசிரம நிர்வாகிகள் அம்மாணவிகளிடம் விசாரித்தபோது தங்களுக்கு நேர்ந்த கொடுமையை அவர்கள் சைகையால் தெரிவித்தனர்.

பயிற்சி பள்ளி நிர்வாகிகள் தங்களை அடித்து, உதைத்து, மிரட்டி, கற்பழித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆசிரம நிர்வாகிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவாஸ் பவுண்டேஷன் இயக்குனர் அல்பனா சர்மா, ஊழியர்கள் சுரேஷ், அசோக், கீதா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேaலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்

உடலில் ஆசிட், பெட்ரோல் ஏற்றி சித்ரவதை: கைதி சாவு

உடலில் ஆசிட், பெட்ரோல் ஏற்றி சித்ரவதை: கைதி சாவு - 4 போலீசார் சஸ்பெண்ட்

லக்னோ, மே 18:

                                      விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கொலை தொடர்பாக பல்பீர் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

எட்டா சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததால் எட்டா மாவட்ட ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் உடல்நலம் தேறாததால், ஆக்ரா ஆஸ்பத்திரிக்கும், பின்னர் லக்னோவில் உள்ள மன்னர் ஜார்ஜ் ஆஸ்பத்திரியிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மரணப்படுக்கையில் மாஜிஸ்திரேட்டிடம் அவர் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாங்கள் எதிர்பார்த்தபடி வாக்குமூலம் அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் ஊசி மூலம் தனது உடலில் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை செலுத்தி போலீசார் விசாரணையின் போது கொடுமைப்படுத்தியதால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டது என மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்பீர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, எட்டா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Friday, May 17, 2013

ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக தகவல்

ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக தகவல்



புதுடெல்லி: சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் சண்டிலா ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 3 கிரிக்கெட் வீரர்களையும் 5 நாள் காவலில் எடுத்துள்ள டெல்லி போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட சூதாட்டத்திற்கான ஆதாரங்களை காட்டி போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் தங்களது தொடர்புகளை ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

தமது நண்பரும் சூதாட்ட தரகருமான ஜிஜூ இதில் சிக்க வைத்துவிட்டதாக ஸ்ரீசாந்தும், தான் மாபெரும் தவறு செய்துவிட்டதாக அங்கித் சவானும் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. விசாரணையின் போது ஸ்ரீசாந்த, அங்கித் சவான் கண்ணீர் விட்டு அழுததாகவும் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி என அவரது வழக்கறிஞரும், குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஸ்பாட் பிக்சிங்: ஸ்ரீசாந்த், சாண்டிலாவுக்கு 3 முறை பெண்களை சப்ளை செய்த புக்கிகள்

ஸ்பாட் பிக்சிங்: ஸ்ரீசாந்த், சாண்டிலாவுக்கு 3 முறை பெண்களை சப்ளை செய்த புக்கிகள் டெல்லி போலீஸ் தகவல்



டெல்லி: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்களையும் புக்கிகள் சப்ளை செய்ததாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் 6வது கிரிக்கெட் தொடரின் கரும்புள்ளியாக ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அமைந்திருக்கிறது. டெல்லி போலீஸ் அதிகாரி பத்ரீஷ் தத்தின் மர்ம மரணத்தின் மூலம் அம்பலத்துக்கு வந்த கிரிக்கெட் மோசடியில் அடுத்தடுத்து புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிக்கிய புக்கிகளான மனான் மற்றும் சந்த் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா ஆகியோருக்கு 3 முறை பெண்களை "ஏற்பாடு" செய்து கொடுத்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சிக்கியுள்ள தொலைபேசி உரையாடல்களில் "சப்ளை" செய்யப்பட்ட பெண்கள் அனுப்பி வைக்கப்பட்ட மற்றும் சென்றடைந்த நேரங்கள் பதிவாகி இருக்கின்றன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஸ்ரீசாந்தும் அவரது நண்பரான பிஜூ என்ற ஜிஜூவும் மும்பை ஹார் பகுதியில் பெண்களுடன் இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருமே ஆர்ஜி நைட் கிளப்புக்கும் தனித்தனியாக கார்களில் சென்றதையும் போலீசார் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இது உண்மைதான் என்று கூறும் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், புக்கிகள் பெண்களை இரண்டு வீரர்களுக்கு "சப்ளை" செய்தது உண்மைதான்.. ஆனால் அந்த பெண்கள் ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபடாததால் அவர்கள் மீது வ்ழக்கு போடுவது முடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.

Wednesday, May 15, 2013

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு தூக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு தூக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது



புதுடெல்லி, மே 15:

டெல்லியில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கிழக்கு டெல்லியில் உள்ள ஜெக பிரவேஷ் சந்திரா அரசு மருத்துவனையில் தலைமை மருத்துவ அலுவலராக நரேந்திர சிங் பணியாற்றி வருகிறார். அவரிடம் சிகிச்சை பெற வந்த 21 வயது பெண் நோயாளியிடம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

அதன்படி அவரை மருத்துவமனைக்கு வெளியில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று, தூக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார். அவர் மயங்கியதும், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தார். மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியான டாக்டரை சீலம்பூரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காஷ்மீர் பதர்வா பள்ளத்தாக்கில் இன்று தொடர் நிலநடுக்கம்

காஷ்மீர் பதர்வா பள்ளத்தாக்கில் இன்று தொடர் நிலநடுக்கம்

பதர்வா, மே 15:


காஷ்மீர் மாநிலத்தின் பதர்வா பள்ளத்தாக்கு மற்றும் தோடா கிஸ்துவார் பகுதிகளில் இன்று அதிகாலை தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை 1.28 மணி நேரத்திலிருந்து 1.33-க்குள் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.8, 5.3, 5.0 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. அதனைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை மேலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதனால் மக்கள் அச்சத்தில் தூக்கமின்றி தவித்தனர். இப்பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதையடுத்து பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் 33 முறை இப்பகுதிகள் குலுங்கியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் பெரிய அளவிலான நிலநடுக்கத்தை சமாளிப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு எடுக்கப்பட்டுள்ளன.