Welcome PradhiKarthik: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் விரட்டியடிப்பு

Sunday, May 26, 2013

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் விரட்டியடிப்பு

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் தே.மு.தி.க.,வினர் விரட்டியடிப்பு: அரசு விழாவில் திடீர் பரபரப்பு  


திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு, கட்சி கொடியுடன் வந்த, தே.மு.தி.க.,வினரை, அ.தி.மு.க.,வினர் அடித்து விரட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில், 2.25 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்தது. அமைச்சர் மோகன் பங்கேற்றார். கட்சி கொடியுடன் அங்கு வந்த, தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலர் உமாசங்கர் மற்றும் நிர்வாகிகள், "தொகுதி, எம்.எல்.ஏ.,வை, ஏன் அழைக்கவில்லை?' என, அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர், "அரசு விழாவில், யாரும் கொடி பிடிக்கக் கூடாது; கொடியை இறக்குங்கள். எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்' என்றார். இதை கேட்காமல் தொடர்ந்து, கோஷம் எழுப்பினர்.

ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர், தே.மு.தி.க.,வினரை அடித்து விரட்டினர். தொடர்ந்து விழா நடந்தது. விழா முடிந்து காரில் வெளியில் வந்த அமைச்சரை மறிக்க, தே.மு.தி.க.,வினர் தயாராக இருந்தனர். அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட, அதிகாரிகளை, போலீசார், பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பினர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கோவிலூர் போலீசில், இரு தரப்பினரும் புகார் செய்தனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், பதட்டம் நிலவியது; போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.