Welcome PradhiKarthik: ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 1 (முக்கிய சம்பவங்கள்)

Sunday, May 26, 2013

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 1 (முக்கிய சம்பவங்கள்)

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 1 
(முக்கிய சம்பவங்கள்)




 வல்லரசுகளுக்கு வலைந்துகொடுக்காமல், இந்தியா, தற்சார்புடன் வளரவேண்டும் என கனவு கண்ட பிரதமர்,நேருவின் அணிசேராக்கொள்கைக்கு வலுசேர்க்கும் நோக்கத்தோடு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர்,இவை எல்லாம் தாண்டி, புதிய இந்தியாவை வடிவமைக்க முனைந்த இளம் பிரதமர்,இத்தனை பெருமைகளுக்கும் சொந்தகாரரான, ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். காலங்கள் உருண்டோடினாலும், அந்த படுகொலை குறித்த, பல்வேறு கேள்விகள் இன்றளவும் விடைவேண்டி நிற்கின்றன.

படுகொலை தொடங்கி இன்றளவும் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:


1986 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி,தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள் விழாஏற்பாடுகளால், டெல்லி ராஜ்காட் கலைகட்டியிருந்தது. நாட்டின் இளம் பிரதமர் தேசப்பிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செய்ய வருகின்றார். மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அந்த சதுக்கத்தில், திடீரென கேட்ட அந்த வெடிச்சத்தத்தை முதலில், யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த 20 நிமிடத்தில், அடுத்தடுத்து இரண்டு முறை வெடிக்கும் சத்தம் கேட்கின்றது.புகை வந்த திசையை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ஒரு சீக்கிய இளைஞனை கைதுசெய்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை தடுக்கத் தவறியதால் ராஜீவ்காந்தியை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொள்கின்றார்.

கோபத்தினால் உந்தப்பட்ட ஒரு இளைஞனின் கொலை முயற்சி, தோல்வியில் முடிவடைகின்றது. ராஜீவ்காந்தி உயிர் தப்புகின்றார்.ஆனால், இதன் பின் நான்கரை வருடம் கழித்து, நடத்தப்பட்ட மற்றுமொரு கொலை முயற்சி, எந்த வகையான தவறுக்கும் இடம்கொடுக்காமல் நடந்து முடிந்தது. காரணம், அக்கொலையின் சிக்கலான, அதேவேளையில், தெளிவான திட்டத்தை முன்வைத்த, உலக தரம்வாய்ந்த வலைபின்னலே.

1989 ஆம் ஆண்டு உலக அரசியலில் வேகமான பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவரின் வீழ்ச்சி, உலகின் முதல் சோசியலிச நாடான, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு தொடக்க புள்ளியாக அமைகின்றது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா என்ற இருபெரும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் முடிவுக்கு வரும் தருவாயை நெருங்குகின்றது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி உலக நாடுகளிடையே புதிய அரசியல் அணிச்சேர்க்கையை கோரியது. உலகின் இந்த குழப்பமான அரசியல் சூழல் இந்தியாவிலும் எதிரொலித்தது. ராஜீவ் பிரதமர் பதவியை இழக்கின்றார்.அடுத்த இரண்டே ஆண்டுகளில் இரண்டு பிரதமர்கள் ஆட்சிக்கு வருகின்றனர்.

1991 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்படுகின்றது.தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ராஜீவ் கலந்துகொள்கின்றார். வடஇந்தியாவில் தேர்தல் முடிவுற்ற நிலையில், தென் மாநிலங்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.