Welcome PradhiKarthik: பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கும்

Friday, May 17, 2013

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கும்

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கும்



தமிழ்நாடு , மே 17:
பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று துறை அதிகாரி தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

பள்ளி, மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் வகையில் 1-முதல் 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் எண்ணிக்கை குறைக்கபட்டுள்ளது. மேலும் பருவமுறை அடிப்படையில் இரண்டாக பிரித்து பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

1-முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவ புத்தகங்களும் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு புத்தகம் வழங்க சுமார் 5 கோடியே 30 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் அனைத்தும் இந்த மாத இறுதியில் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும். அரசு பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது.

மாவட்டதில் ஏதாவது ஒரு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படும். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 22 இடங்களில் புத்தகங்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு அடையாறில் உள்ள டெப்போவில் இருந்து விநியோகம் செய்யப்படுகிறது. பாடப்புத்தகங்கள் விலை கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.5 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. 2-ம் வகுப்பு பாடப்புத்தகம் (முதல் பருவம்) கடந்த ஆண்டு ரூ.60-க்கு விற்கப்பட்டது. இந்த வருடம் ரூ.65-க்கு வழங்கப்படுகிறது.

9-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ரூ.65 விலை உயர்த்தப்பட்டு ரூ.165 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அதிகாரி ஒருவர் கூறும் போது, மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் பாடப் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ந் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப் புத்தங்கள் அனுப்பப்படும் என்றார்.