அதென்ன அலட்சியமோ? படப்பிடிப்புக்கு போகிற வரைக்கும் கூட டைட்டில் வைக்காமல் ரிலீஸ் நேரத்தில் இயக்குனர்கள் தவிக்கிற காட்சிகளை அடிக்கடி சந்திக்கிறது கோடம்பாக்கம். காவல்காரன் டைட்டில் கடைசியில் மாற்றும்படியானது மக்கள் அறிந்ததே. அது காவல் காதல் என்று மாற்றப்பட்டிருப்பதாக வரும் தகவல்களும் உண்மையில்லையாம்.
இந்தியாவின் அடையாளம் என்று வர்ணிக்கப்படும் மணிரத்னம் கூட தனது படத்திற்கு ராவணன் என்று தலைப்பை வைப்பதற்கு முன் இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளிக்குமா, வேறு யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்றெல்லாம் யோசிக்கவில்லை. அந்த பெயரை வேறொருவர் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் பெரும் விலை கொடுத்து கடைசி நேரத்தில் அவர் அதை வாங்க நேர்ந்தது என்றும் தகவல்கள். இத்தனைக்கும் தயாரிப்பாளர் சங்க அலுவலகம், மணிரத்னம் ஆபிசிலிருந்து நடந்து போகிற து£ரம்தான். உதாரணங்கள் இவ்வளவு இருந்தும் இந்த டைட்டில் அலட்சியம் இன்னும் கோடம்பாக்கத்தில் தொடர்வதுதான் வேடிக்கை.
வெங்கட்பிரபுவின் மங்காத்தா படத்தலைப்புக்கும் தற்போது சிக்கல் வந்துள்ளதாக தெரிகிறது. ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி இந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையன்றை இயக்கும் முடிவிலிருக்கும் அவர், எக்காரணத்தை முன்னிட்டும் மங்காத்தா தலைப்பை தாரை வார்ப்பதாக இல்லையாம். ஆனால் இந்த தலைப்புக்காக அஜீத்தே அக்கினேனியிடம் போனில் பேசினாராம். காயா? பழமா? என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரியவரும்!