மெய்காப்பாளர் 'பகீர்' தகவல்:
பின்லேடன் இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்து இறந்தார்
புதுடெல்லி, மே 29:
அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலாவரும் நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் 'சீல்' படையினர் நெருங்குவதற்குள் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து, மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை. எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறுகிறார்.
அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 'பெல்ட்'டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா கூறினார்.