ரூ 19 கோடி மோசடி:
பிரபல மலையாள நடிகை லீனா மரியா காதலனுடன்
பண்ணை வீட்டில் கைது!
பார்க்க கொஞ்சம் அமலா பால் மாதிரிதான் தெரிகிறார் இந்த லீனா மரியா பால். முகம்தான் பால் வடிகிற மாதிரி இருக்கிறதே தவிர, அம்மணி செய்துள்ள வேலைகள் அடேங்கப்பா ரகம். இவரும் இவரது காதலன் பாலாஜி என்கிற சந்திரசேகரும் சேர்ந்து ஆள்மாறாட்ட மோசடிகளில் ஈடுபட்டு பல கோடியை அபேஸ் செய்துள்ளனர்.
கனரா வங்கி சேர்மன்:
அதுமட்டுமல்ல, ஐஏஎஸ் அதிகாரிகளைப் போல வேடமிட்டு, பல பெரும்புள்ளிகளிடம் பல கோடிகளை முதலீடு என்ற பெயரில் பெற்று ஏமாற்றியுள்ளனர். கனரா வங்கியின் சேர்மன் என்று நடித்து ரூ 19 கோடியை சுருட்டியுள்ளனர். இப்படி சுருட்டிய பணத்தில்தான் பலகோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ என உலகின் காஸ்ட்லியான கார்கள் அனைத்தையும் வாங்கி அனுபவித்து வந்துள்ளனர்.
லிவிங் டுகெதர் பார்ட்னர்:
லீனாவின் காதலன் பாலாஜி என்கிற சந்திரசேகர் சென்னையைச் சேர்ந்தவர்தான். இவர்கள் அரங்கேற்றிய மோசடிகள் அனைத்தும் சென்னையைச் சேர்ந்தவர்களிடம்தான். இருவரும் லிவிங் டுகெதர் என்ற முறையில் தாலி கட்டாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். சென்னையில் செய்த மோசடிகளை போலீசார் ஸ்மெல் பண்ணிவிட்டதை தெரிந்து கொண்டதுமே இங்கிருந்து இருவரும் தப்பி விட்டனர்.
சிக்கியது எப்படி?
கடந்த மே 12-ம் தேதி லீனாவும் பாலாஜியும் தெற்கு டெல்லியில் உள்ள இந்த பண்ணை வீ்ட்டை மாதம் ரூ 4 லட்சம் வாடகை பேசி குடிவந்துள்ளனர். அப்போது உள்ளூர் போலீஸிடம் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை விசாரணைக்காகக் கொடுத்துள்ளனர். ரூ 19 கோடி கனரா வங்கி மோசடியில் லீனாவுக்கும் தொடர்பிருப்பதை போலீசார் பல மாநில போலீசுக்கும் தகவலாகக் கொடுத்துள்ளனர். அப்போதுதான் லீனா மீது டெல்லி போலீசாருக்கு சந்தேகம் வந்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
ஆயுதம் தாங்கிய ஆறு செக்யூரிட்டிகள்:
பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்தாலும், தொடர்ந்து அங்கு தங்குவதைத் தவிர்த்த லீனா - பாலாஜி ஜோடி, அடிக்கடி டெல்லியில்தான் தங்கியிருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆயுதம் தாங்கிய ஆறு செக்யூரிட்டிகள் வேறு. இந்த ஆயுதங்களுக்கு ஹரியானாவில் லைசென்ஸ் பெற்றுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காதலன் பாலாஜியுடன் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்குப் போய் திரும்பிய லீனாவைப் பின் தொடர்ந்த போலீஸ், அதிரடியாக பண்ணை வீட்டில் புகுந்துவிட்டனர்.
விலையுயர்ந்த கார்கள், ஆயுதங்கள் பறிமுதல்:
இருவரையும் கைது செய்ததோடு, அங்கிருந்த விலையுயர்ந்த கார்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்தனர். லீனா - பாலாஜியின் பணம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள், சினிமா வட்டார நண்பர்களின் விவரங்களை இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.