குருப்பெயர்ச்சி பலன்கள் :விருச்சிக ராசி
விருச்சிகம் ராசி:
(விசாகம் 4, அனுஷம், கேட்டை) எல்லோரிடமும் அன்பாக இருக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே! உங்களுக்கு இதுவரை குருபகவான் 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். நீங்கள் பல்வேறு உன்னதமான பலன்களை அடைந்திருக்கலாம். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குருபகவான் 8-ம் இடமான மிதுனத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல.
8-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மைÛயும் கொடுப்பார். பொருளாதாரச் சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு.அந்த பார்வை உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தனுசுவில் விழுகிறது, தனுசு ராசியில் விழும் அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குருபகவான் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். ஆனாலும் இந்த வக்கிர காலத்தில் குருவின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக உங்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகம் சிறப்படையும். திருமணம் போன்ற சுபங்கள் கைகூட பேச்சு வார்த்தை தொடங்கும். கேதுவின் பலம் மற்றும் குருபகவான், சனிபகவானின் பார்வைகளால் நன்மை கிடைக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாகவே இருக்கும். ஆனால் செலவும் வரும். உங்களின் முயற்சி வெற்றி அடையும். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களைத் தவிர்க்கவும். அதேநேரம் உங்கள் கவுரவத்திற்கு எந்த பாதிப்பும் வராது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடை படலாம். அதே நேரம் தீவிர முயறச்சியின் உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்புபோல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும்.
எது எப்படியானாலும் குருவின் பார்வையால் எதையும் முறியடித்து வெற்றி காணலாம். வியாபாரிகள் கடந்த காலத்தைப்போல் அசட்டையாக இருக்க வேண்டாம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். அரசிடம் எதிர்ப்பார்த்த உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது. அதே நேரம் வீண்விரையம் வரலாம். ஆன்மிகம் தொடர்பான தொழில் நடத்துவோர் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் மற்றும் பொது நல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் வெற்றிபெற அதிக பிரயாசை பட வேண்டியதிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனைத் தான் பெற முடியும். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.. வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும்.வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்படையும். சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர். சனிபகவான் தற்போது வக்கிரத்தில் உள்ளார். அவர் 6-7-2013 வரையில் வக்கிரத்தில் இருப்பார்.
இதனை அடுத்து 4-3-2014 முதல் 19-7-2014 வரையிலும் சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் தொழில் சிறப்படையும். குறிப்பாக இரும்பு தொடர்பான தொழில் சிறந்தோங்கும். எதிரிகளை சமாளிக்கும் திறன் மேம்படும். வக்கீல், தரகு போன்ற தொழில் நன்றாக இருக்கும்.
பரிகாரம்:- முருகனை வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் தன்மையையும், மன தைரியத்தையும் உங்களுக்கு கொடுக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுங்கள். வசதி படைத்தவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்யலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் திருநள்ளாறு, தேனிமாவட்டம் குச்சனூர், மதுரை அருகே திருவாதவூர் ஆகிய ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வரலாம்.