குருப்பெயர்ச்சி பலன்கள் : தனுசு ராசி
தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம்-1ம் பாதம்) பெரியோர்களிடமும், சான்றோர்களிடமும், செல்வாக்கு படைத்தவர்களிடமும் விசுவாசிகளாகவும், நண்பர்களாகவும் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும் நேரம். படிப்படியாக முன்னேற்றம் காணும் காலம். இதுவரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அங்கு இருக்கும்போது அவர் பல்வேறு இன்னல்களைத் தந்திருப்பார். மன நிம்மதியை இழக்கச் செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டுபண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள்.
இந்த நிலையில் இப்போது குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை அவர் மேலும் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தர இருக்கின்றார். 7-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அதோடு குருபகவானின் 5-ம் இடத்துப் பார்வையாலும் நன்மை தருவார். அந்த பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாமில் விழுகிறது. அதன் மூலம் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். சனிபகலான் இப்போது 11-ம் இடமான துலாமில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அங்கு அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.
நிழல் கிரகமான ராகுவும் 11-ம் இடத்தில் சனிபகவானோடு இணைந்து காணப்படுகிறார். இது சிறப்பான இடம். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ராகு நன்மை தரும்போது அவருக்கு நேர் எதிரே உள்ள இன்னொரு நிழல் கிரகமான கேதுவால் நற்பலனைத் தரமுடியாது. அவர் 5-ம் இடமான மேஷத்தில் இருந்து எதிரிகளின் தொல்லையை தரலாம். உங்கள் செல்லாக்கு, அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த பொருளை வாங்கி மகிழலாம். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து ,விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் சரணடைவர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படவர் சம்பள உயர்வு எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வெகு நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பக்க தொழில் செய்பவர்கள் அதில் நல்ல வளத்தைக் காணலாம். வேலைப்பளு வெகுவாக குறையும். வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பர்.
புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தைக் காணலாம். லாபம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். கூட்டாளிகளிடையேஒற்றுமை ஏற்படும். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும். தீயோர் சேர்க்கையால் சீரழிந்து போனவர்கள் அதிருந்து விடுபட்டு நல்ல வழி கண்டு முன்னேற்றம் அடைவர். சிலர் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை வளம்பெற செய்வர். உங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் நம்பிக்கையுடனும், நல்ல எண்ணத்துடனும் நடந்துகொள்வர். அவர்களும் உங்களால் நல்ல பலனைக் காண வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சுறுசுறுப்பு ஏற்படும். கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள்: மந்த நிலை மாறும். நற்கல்வி பெறுவர். கூடுதல் மதிப்பெண் பெறலாம்.மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர். விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர் அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். நவீன விவசாயம் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெறலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். தீர்ப்புகள் சாதகமாக அமையும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உடல்நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
குரு 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். குருபகவான் உங்களுக்கு நன்மை தரும் காலம் என்பதால் இந்த வக்கிர காலத்தில் அவர் சிறப்பான பலனைத் தரமாட்டார். எனவே இந்த வக்கிர காலத்தில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு இருக்கும். எல்லோரிடத்திலும் அனுசரணையாக போகவும். திருமணம் போன்ற சுபங்கள் பற்றி பேச வேண்டாம். இந்த காலத்தில் குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழை குழந்தைகள் படிக்க இயன்ற உதவி செய்யுங்கள்.
பரிகாரம்:- கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவருக்கு பரிகாரம் செய்யுங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். சித்திரபுத்திரநாயனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுங்கள். வசதி படைத்தவர்கள் பசு தானம் செய்யலாம்.