ஐ.பி.எல் சூதாட்டம் சுரேஷ் ரெய்னா உட்பட 10 வீரர்கள் சிக்குகிறார்கள்
லக்னோ: ஐ.பி.எல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சுரேஷ் ரெய்னா உட்பட உ.பியைச் சேர்ந்த 10 வீரர்கள் மீது சந்தேகம் எழுந்தள்ளதால், அவர்களை கண்காணித்து வருகிறோம் என்று உத்தரப் பிரதேச மாநில கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் குமார் கூறியதாவது:உ.பி.யில் வாரணாசி, மீருட், கான்பூர், காஜியாபாத் போன்ற இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்களை கண்டுபிடித்துள்ளோம். தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த மோசடியில் பலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் தனியாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
உ.பி.யைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, இம்தியாஸ் அகமது, அங்கித் சிங் ராஜ்புத், புவனேஸ் குமார், அலி முர்தாசா, எகலாவ்யா திவிவேதி, ருத்ர பிரதாப் சிங், பிரவீன் குமார், பியுஷ் சாவ்லா ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். இப்போதைக்கு எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது.ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விரை வில் கைது செய்யப்படுவர். தேவைப்பட்டால் டெல்லி, மும்பை போலீசாருடன் இணைந்து செயல்படுவோம். முன்னாள் முன்னனி வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலரை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அருண் குமார் கூறினார்.