ஐக்கிய அரபுக் குடியரசில் மரண தண்டனை பெற்ற இந்தியர்
துபாய், மே 28:
ஐக்கிய அரபுக் குடியரசில், பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 28 வயது இந்தியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு, செப்டெம்பர் மாதம், பர் துபாயில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்ற அவன், அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம், அவரது கணவரிடம் தான் வாங்கிய வாஷிங் மெஷினுக்கான ஒரிஜினல் ரசீதை கேட்டுள்ளான்.
கணவர் வந்தவுடன் வாங்கிக் கொள்ளுமாறு அந்தப் பெண் கூறியுள்ளார்.
அப்போதும் வெளியே போகாத அவன், தண்ணீர் கொடுக்குமாறு கேட்டுள்ளான். அந்தப் பெண்ணும் தண்ணீர் கொண்டு வந்துள்ளார். அப்போது, திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து அந்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்த நகைகளைத் திருடிச் சென்றுள்ளான்.
இதுதொடர்பாக செப்டெம்பர் மாதம், 26ஆம் தேதி, காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. பின்னர், அந்தக் குற்றவாளி அல் ரபா என்ற இடத்தில் கைது செய்யப்பட்டான். விசாரணையில் அவனது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் குற்றவாளி மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆயினும், தீர்ப்பை மாற்ற இயலாது என்று நீதிமன்றமோ, மன்னரோ கருதினால், துப்பாக்கியால் சுடப்பட்டு அவனது மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.