தேமுதிகவில் மீண்டும் கலகம்:
ஜெ.வை சந்தித்தார் மற்றொரு எம்.எல்.ஏ. சேந்தமங்கலம் சாந்தி
சென்னை: ஓய்ந்திருந்த தேமுதிக எம்.எல்.ஏக்களின் கலகக் குரல் மீண்டும் வெடித்திருக்கிறது. சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சாந்தி இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி மக்களின் பிரச்சனைக்காக மனு கொடுத்தார். சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இடம் பெற்று தேர்தலை சந்தித்தது தேமுதிக. இதன் மூலம் 29 எம்.எல்.ஏக்களைப் பெற்றது அந்த கட்சி. பின்னர் சிறிது காலத்திலேயே அதிமுகவுடன் மோதல் ஏற்பட்டு கூட்டணியை விட்டு வெளியேறியது. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியில் பெரும் அதிருப்தி வெடித்தது. அக்கட்சியின் மதுரை சுந்தரராஜன், திட்டக்குடி தமிழழகன்,மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்துப் பேசினர். அவர்களைத் தொடர்ந்து செங்கம் எம்.எல்.ஏவும் விஜயகாந்த் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த 5 எம்.எல்.ஏக்களுக்கும் சட்டசபையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கும் தேமுதிக எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் பெரும் மோதலே நடந்தது. இதில் 6 விஜயகாந்த் ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கு சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யபட்டிருக்கின்றனர். இதனால் தேமுதிகவின் பலம் 18 எம்.எல்.ஏக்களானது. இதனால் ராஜ்யசபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று அந்த கட்சி குழம்பிப் போயுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த இந்த அணி தாவும் படலம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்.எல்.ஏ. சாந்தி திடீரென இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும் தமது தொகுதியின் பிரச்சனைகளுக்காக முதல்வரிடம் மனு கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
இன்று முதல்வர் ஜெயலலிதாவை சாந்தி சந்தித்திருப்பதன் மூலம் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பலம் 6ஆக அதிகரித்துள்ளது. சட்டசபையில் விஜயகாந்த் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17ஆகக் குறைந்துள்ளது. ஆக மீண்டும் தேமுதிக கூடாராத்தில் கலகக் குரல்!