Welcome PradhiKarthik: கச்சத்தீவு அருகே இலங்கை போர் கப்பல்கள் நிறுத்தம்: மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Friday, May 31, 2013

கச்சத்தீவு அருகே இலங்கை போர் கப்பல்கள் நிறுத்தம்: மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

கச்சத்தீவு அருகே இலங்கை போர் கப்பல்கள் நிறுத்தம்: 
மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை


ராமேசுவரம், மே. 31:

மீன்களின் இனப்பெருக்க காலமான ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ந்தேதி வரை மீன்பிடிக்க தொடர்ந்து 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மீன்பிடிக்க தடைகாலம் முடிந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

ராமேசுவரம் மீனவர்கள் நாளை (1-ந்தேதி) அதிகாலை முதல் மீன்பிடி டோக்கன் பெற்று செல்ல உள்ளனர். இந்த நிலையில் இலங்கை ராணுவம் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க வந்து விடாதபடி கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதியில் 7 கடற்படை ரோந்து கப்பல்களையும், 9 குட்டி ரோந்து கப்பல்களை நிறுத்தி உள்ளது. 

மேலும் கச்சத்தீவு எல்லையை குறிக்கும் வகையில் மிதவை பலூன்களையும் கடலில் மிதக்க விட்டுள்ளனர். நேற்று பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் இங்கு மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரித்து விரட்டினர். உயிருக்கு பயந்து கரை திரும்பிய 

நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது:- 

கச்சத்தீவு அருகே இதுவரை எப்போதும் இல்லாத வகையில் தற்போது இலங்கை அரசு போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளது. இதனால் மீனவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர். 

இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:- 

தடைக்காலம் முடிந்து நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர். அதிக மீன்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள தகவல் அறிந்து கவலை அடைந்துள்ளோம். நாங்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடத்தில்தான் மீன்பிடிப்போம். 

எல்லை தாண்டமாட்டோம். போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பலமுறை இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை தாக்குவதும், விரட்டுவதும், கடத்தி செல்லுவதும் வழக்கம். இப்போது போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ராமேசுவரம் மீனவர்களுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மீனவர் சங்க தலைவர் மெரிட் கூறும்போது, மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிக்க கூடாது. மீனவர்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். மீனவர்கள் அப்பாவிகள். அவர்கள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மீனவர் சங்க தலைவர் போஸ் கூறும்போது, கச்சத் தீவு அருகே போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.