Welcome PradhiKarthik: குருப்பெயர்ச்சி பலன்கள் : மேஷ ராசி

Tuesday, May 28, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் : மேஷ ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் 

மேஷம்: 

(அஸ்வினி, பரணி, கிருத்திகை -1ம் பாதம்) இந்த பூமி மீது அளவற்ற பாசம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும். இவ்வளவு நன்மைகளை தந்து கொண்டிருந்த குருபகவான் 2-ம் இடத்தில் இருந்து 3-ம் இடமான மிதுனத்துக்கு வருகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது ஜோதிட வாக்கு. அதாவது துரியோதனனின் ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும்போது அவனது படை தோல்வி அடைந்தது என்பதாம். அந்த அளவுக்கு மோசமான பலன்கள் உங்களுக்கு நடக்குமோ! என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில் அந்த சூழ்நிலை வேறு, இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ! என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9-வது வீட்டை பார்க்கிறார். குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. எனவே குருவின் பார்வைகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எதிர் இடையூறைகளை உடைத்தெறிவீர்கள்.

                                           மேலும் குருபகவான் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி முதல் 2014-ம் ஆண்டு மார்ச் வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் கெடுபலனை தரமாட்டார். மாறாக நன்மையே தருவார். மேற்கண்ட முக்கிய கிரக நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். கடந்த காலங்ளைபோல் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. உங்கள் செல்வாக்கிலும் எந்த பங்கமும் வராது. அதேநேரம் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. குருவின் பார்வைகளால் எந்த பங்கமும் ஏற்படாது. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். தீவிர முயற்சியின் பேரில் அவை நிறைவேறும்.

                                            முக்கிய பொறுப்புகளை மனைவியிடம் ஒப்படைக்கவும். அதன் மூலம் நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலமாக இருக்கும், கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். சிறு சிறு மனக்குழப்பங்கள் இருந்தாலும் அவை நொடிப்பொழுதில் மறையும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெருவீர். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். சிலருக்கு திருமணம் சற்று தாமதத்தைக் கொடுக்கலாம். 

                                  ஆனாலும் குருவின் பார்வையால் திருமணம் கைகூடும். அது நல்ல வரணாகவும் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு இருக்கும். வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் அதிக முயற்சி எடுத்தால்தான் எண்ணம் நிறைவேறும். உத்தியோகம் பார்ப்பவர்கள் இதுவரை நல்ல மதிப்பு, மரியாதையோடுதான் இருந்திருப்பீர்கள். இனி அந்த அளவுக்கு நற்பலனை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் பிற்போக்கான நிலையும் இருக்காது. உங்கள் ஆற்றல் மேம்படும். உழைப்பு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற வருமானமும் இருக்கும். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம். சிலர் பொறுப்புகளை விட்டுக் கொடுக்க நேரிடலாம். எனவே வேலையில் கவனமாக இருக்கவும். உங்கள் வேலையை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். நீங்களே செய்து முடிப்பது நல்லது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். 

                                            ஆனால் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை உங்கள் நிலை சிறப்பாக இருக்கும். அப்போது மேல் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் எதிரிகளின் சதி எடுபடாமல் போகும். வியாபாரத்தில் உள்ளவர்கள் சீரான முன்னேற்றத்தில் இருப்பர். தொழில் அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் எதிர்கொண்டு உழைத்தால் முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு. எதிரிகளின் தொல்லை அவ்வப்போது தலைதூக்கலாம். தீயோர் சேர்க்கையால் சிலர் அவதிப்படலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். அரசு உதவி கிடைப்பது அரிது. புதிய முதலீடு போடுவதை விட தற்போது இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். மார்ச் மாதத்திற்கு பிறகு உங்கள் நிலையில் சற்று முன்னேற்றத்தைக் காணலாம். கலைஞர்கள் கவுரவமாக வாழ்வர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். 

                                   ஆனால் அதற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். அதே நேரம் உங்கள் தியாகத்திற்கு என்றென்றும் மரியாதை உண்டு. மாணவர்கள் அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வைகளால் உங்கள் முயற்சிக்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியரின் அறிவுரை உங்களுக்கு தகுந்த பலனை கொடுக்கும். விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதற்கு ஏற்றபலனை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும்.மானாவாரி பயிர்களில் லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெரிய பாதிப்பு ஏற்படாது. புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

                  பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். இந்த ராசியுடைய குழந்தையின் பெற்றோர்கள் அவர்கள் நடத்தையில் சற்று கவனமாக இருக்கவும். சிலர் தகாதவர்களோடு சேர வாய்ப்பு உண்டு. உடல் நலம் சீராக இருக்கும். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிற்சில உபாதைகள் வரலாம். ஆனால் அது பாதிப்பை ஏற்படுத்தாது.

பரிகாரம்:- நீங்கள் காலையில் விநாயகரை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடவும். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முடிந்தால் பழனி சென்று வாருங்கள். மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழை குழந்தைகளுக்கு படிப்பதற்கு இயன்ற உதவியை செய்யவும்.