ஜெயலலிதா அறிவிப்பை தொடர்ந்து அரசானை வெளியீடு :
தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான்மசாலாவுக்கு தடை அமலுக்கு வந்தது
சென்னை
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்று கடந்த 8–ந்தேதி சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவை விதி எண் 110–ன் கீழ் ஓர் அறிக்கையை படித்த முதல்–அமைச்சர், புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களை தடுக்கும் வகையில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாக அப்போது தெரிவித்தார்.
இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை தொடர்ந்து, குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு நேற்று வெளியிடப்பட்டது.
உடல்நலத்திற்கு கேடு
இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதிமுறைகளின்படி, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றை எந்த ஒரு உணவு பொருளிலும் சேர்க்கக்கூடாது. குட்காவும், பான் மசாலாவும் புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கப்படும் உணவு பொருளாக உள்ளன. எனவே, குட்காவுக்கும், பான்மசாலாவுக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.
அமலுக்கு வந்தது
எனவே, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை, நிக்கோடின் இடம்பெறும் இதர உணவு பொருட்கள் எந்த பெயரில் சந்தையில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் இந்த உத்தரவு வெளியான நாள் முதல் ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
அரசு உத்தரவு நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
பான்மசாலா விற்பனைக்கு தடை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி, தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா விற்பனை செய்வதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவு நேற்று இரவு அரசு பிறப்பித்து உள்ளது. வியாபாரிகள் தங்கள் கையிருப்பில் உள்ள பான்மசாலா, குட்காவை அகற்றுவதற்கு ஒரு மாத காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் சரக்குகளை அகற்றி விடவேண்டும். அதையும் மீறி கையிருப்பில் வைத்து இருந்தால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அத்துடன் சம்பந்தப்பட்ட வியாபாரிகள், கடைக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.