Welcome PradhiKarthik: மதுரவாயல் அருகே பயங்கர விபத்து: மேம்பாலத்தூணில் அரசு பஸ் மோதி, கண்டக்டர் உள்பட 2 பேர் பலி

Tuesday, May 28, 2013

மதுரவாயல் அருகே பயங்கர விபத்து: மேம்பாலத்தூணில் அரசு பஸ் மோதி, கண்டக்டர் உள்பட 2 பேர் பலி

மதுரவாயல் அருகே பயங்கர விபத்து: 
மேம்பாலத்தூணில் அரசு பஸ் மோதி, 
கண்டக்டர் உள்பட 2 பேர் பலி 15 பயணிகள் படுகாயம்
மதுரவாயல் அருகே மேம்பாலத்தூணில் மோதிய அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

பூந்தமல்லி:

மதுரவாயல் அருகே பறக்கும் சாலைக்கு அமைக்கப்பட்ட மேம்பாலத்தூணில் அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு விரைவு பஸ்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ் ஒன்று பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு 9 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

பஸ்சை மணிகண்டரமேஷ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடி, முல்லர்புரம் பகுதியைச் சேர்ந்த கண்டக்டர் தாயப்பன் (42) பயணிகளிடம் டிக்கெட் வாங்கி விட்டு, டிரைவர் சீட்டுக்கு அருகே உள்ள சீட்டில் அமர்ந்திருந்தார். பஸ்சில் 42 பயணிகள் பயணம் செய்தனர்.

மேம்பாலத்தூணில் பஸ் மோதியது
இன்று அதிகாலை 4.45 மணிக்கு மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், வெங்காயமண்டி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையின் இடதுபுறம் இருந்த தூணில் பயங்கரமான மோதியது. இந்த தூண், மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை பறக்கும் சாலைக்காக அமைக்கப்பட்டது ஆகும்.

தூண்மீது மோதியதால், பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் சில பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

கண்டக்டர் உள்பட 2 பேர் பலி

விபத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்த கண்டக்டர் தாயப்பன் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உடல் நசுங்கி பலியானார். அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் விபத்தில் காயம் அடைந்தவர்களில் சிலரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஓசூரைச் சேர்ந்த காமாட்சி (35) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். இவர் சென்னையில் தங்கி படித்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து உதவி கமிஷனர் ஜெயக்குமார், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த கண்டக்டர் தாயப்பனின் உடலை மீட்டனர்.

மேம்பாலத்தூணில் மோதியபடி சிக்கியிருந்த அரசு பஸ்சை வெல்டிங் மெஷின் மற்றும் இயந்திரங்கள் மூலம் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறுத்து எடுத்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

15 பேர் படுகாயம்

பஸ் மோதிய விபத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த துர்கா (28), சென்னை பாடியைச் சேர்ந்த சரோஜா(71), சோழிங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீதர்(26), கீதாஞ்சலி(20), பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(59), அவரது மனைவி செல்வி(52), மகன் ரோகித்மூர்த்தி(22), மகள் சசிரேகா(32), சந்திரமவுலி (58), விக்னேஷ்(25), பூர்ணிமா(23), நிர்மலா(55), காஞ்சனா(62), வெங்கடேஷ்வரலு(27), ரேச்சல்மேரி ஆகிய 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் தூக்க கலக்கத்தில் அயர்ந்து தூங்கியபடி பஸ்சை ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வாகனங்களை முந்திச் செல்லும் போது விபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 பஸ் டிரைவர் மணிகண்டரமேசுக்கு பஸ்சின் ஸ்டியரிங் வயிற்றுப்பகுதியில் பலமாக குத்தியதால் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அபாயகரமான நெடுஞ்சாலை

கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் செல்வதற்காக பல கோடி மதிப்பீட்டில் பறக்கும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. தற்போது அந்த பணிகள் கைவிடப்பட்ட நிலையில் சாலையின் நடுவே தூண்கள் வெறும் காட்சிப் பொருளாக நிற்கின்றன.

மேலும் நெற்குன்றம் பகுதியில் மட்டும் சாலையின் நடுவில் மற்றும் வலது, இடதுபுறங்களில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது அங்கு இரவு நேரங்களில் மின் விளக்குகள் போடப்பட்டிருந்தது.

பணிகள் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மின்விளக்குகள் ஏதும் இல்லாததால் சாலையின் இடதுபுறம் இருந்த தூணில் பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து மிகுந்த இப்பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.