குருப்பெயர்ச்சி பலன்கள் : கடக ராசி
கடகம்:
(புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) செல்வம் சேர்ப்பதிலேயே குறிக்கோளாக இருக்கும் கடக ராசி அன்பர்களே! குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்து வந்தார் அவர் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். குறிப்பாக புதிய பதவியும், சம்பள உயர்வும் கிடைத்திருக்கும். வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும்.பல்வேறு நன்மைகளை தந்த குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மிதுனத்துக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சுமாரான நிலையே. இனி அவரால் நன்மை தர இயலாது. குரு 12-ம் இடத்தில் இருக்கும்போது பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் என்பது பொதுவான பலன். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். குரு பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் இறுதியில் உங்களுக்கு நன்மையிலேயே முடியும். ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே குரு பகவானின் தண்டனை அமையும். மாணவனை ஆசிரியர் அடிப்பது நன்மைக்கே. அதேபோல் குரு பகவானின் கெடு பலன்கள் உங்களுக்கு இறுதியில் நன்மையே தரும். குரு வக்கிரம் அடையும் போது அந்த கிரகத்தால் இயல்பாக செயல்பட முடியாது. உங்களை பொறுத்தவரை குருபகவான் சாதகமாக காணப்படவில்லை.
அவர் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். ஆனாலும் இந்த வக்கிர காலத்தில் குருவின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக உங்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகம் சிறப்படையும். திருமணம் போன்ற சுபங்கள் கைகூட பேச்சு வார்த்தை தொடங்கும். உங்களுக்கு சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் . ஆனாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. அதாவது அந்த பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான தனுசுவில் விழுகிறது, இதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியைத் தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். சீரான முன்னேற்றத்தைக் காணும் காலம். எதிலும் எளிதில் வெற்றி காணமுடியாது. எடுத்த காரியத்தை முடிக்க அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் இருக்கும்.
அதே நேரம் பண வரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். எனவே அனாவசிய செலவை குறைக்கவும். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சனிபகவானின் பார்வையால் உங்கள் நிலை சற்றும் குறையாது. எதையும் சமாளித்து முன்னேற அவர் கருணை காட்டுவார். வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். அவ்வப்போது சிறுசிறு பூசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையாகவும், விட்டு கொடுத்தும் போக வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். அதே நேரம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். அப்படி தாமதம் ஆவதும் ஏதோ ஒரு வகைக்கு நல்லதற்கே என்று நினைக்கவும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. எனவே சற்று கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்தைப்போல அனுகூலங்கள் இருக்கும் என்று எண்ண வேண்டாம். அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கான மதிப்பும், வருவாயும் இருக்கும். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்தில் போதிய வருவாயை காணலாம். அதிக அலைச்சல் இருக்கும். கடின உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். எதிரிகளின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. தொழில் போட்டி உருவாகும். நல்லவர்கள்போல் பழகி உங்களை பணமோசடி செய்ய சிலர் முனையலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. சிலருக்கு போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிதாகும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த கூவரும். அதிக முதலீடு செய்யும் விவசாயத்தை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள்: கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்:- குருபகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கலாம். அப்போது கொண்டக்கடலை தானம் செய்யலாம். பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யுங்கள். திருச்செந்தூர், பழநி போன்ற முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடலாம். வசதிபடைத்தவர்கள் ஆலங்குடி சென்று தட்சிணாமூர்த்திக்கு 21 தீபங்களை ஏற்றி வழிபடலாம்.